தர்மகர்மாதிபதி யோகம்
திரைக்கடல் ஒடியும் திரவியம் தேடு என்று நமது நாட்டில் ஒரு பழமொழி உள்ளது. ஒருவர் ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமையப் பெற்றால் தான் வெளி நாடு செல்லும் வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த தர்மகர்மாதிபதி யோகம் கொடுக்கக்கூடிய திசாபுக்திகள் நடைபெறும் போது வெளிநாடு செல்வதோடு மட்டுமல்லாமல் அந்நிய நாட்டில் தங்கி தொழில் உத்தியோகம் செய்யும் அற்புத யோகமும் அமையப் பெறுகிறது.
முதலில் தர்மகர்மாதிபதி யோகத்தை பற்றி பார்ப்போம். ஒருவர் ஜாதக கட்டத்தில் 9ஆம் இடம் பாக்கியம், செல்வம், செல்வாக்கு போன்றவற்றை குறிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக 9ஆம் இடம் தந்தையை பற்றியும் அவரது யோகம் பற்றியும் குறிப்பிடுகிறது.
10ஆம் இடம் தொழில் ஜீவனம், கர்மம் போன்றவற்றை எடுத்துரைக்கிறது. 9,10க்கு அதிபதிகள் இணைந்து காணப்படும் போது ஒருவருக்கு தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 9,10க்கு அதிபதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. 9,10க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனைப் பெற்றாலும் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. இந்த தர்மகர்மாதிபதி யோகம் அமையப் பெற்றால் செல்வம் செல்வாக்கு அமையப் பெற்றவர்களாகவும், சிறந்த தொழில் மேதையாகவும், வெளிநாட்டில் வேலை கிடைத்து அதிக பணம் சம்பாதிக்கும் அற்புத யோகம் அமையப் பெற்றவர்களாகவும் திகழ்வர்.
10ஆம் அதிபதி குருவாக இருந்து சந்திரனுடன் சேர்க்கை பெற்றால் யாகங்கள் செய்வான் என்றும் அந்த குருவோடு சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் அரசியலில் ஈடுபட்டு மந்திரி ஆவான் என்றும் கூறப்படுகிறது.
ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் வீடும், 10ஆம் வீடும் பலமின்றி காணப்பட்டால் அவன் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகிறான். அவன் எவ்வளவு திறமை பெற்றிருந்தாலும் அவனுடைய புகழ் குடத்திலிட்ட விளக்கு போலக் காணப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் 9ஆம் வீடு பலம் பெற்றுக் காணப்பட்டால் அவர் தந்தையைவிட பலசாலியாக வலிமை மிக்கவனாக காணப்படுகிறான்.
9ஆம் வீட்டுக்கு அதிபதியும் சுக்கிரனும், இணைந்து லக்கினத்தில் அமையப் பெற்றாலும் குருவும் பாக்கியாதிபதியும் இணைந்து 10ஆம் இடத்தில் காணப்பட்டாலும் திரண்ட செல்வம் ஏற்படுகிறது என்று ஜாதக அலங்காரம் கூறுகிறது. அது மட்டுமல்ல அழகிய மனைவி அமையப் பெற்று அன்னிய நாட்டில் சக்கரவர்த்தியாகும் அற்புத யோகம் ஏற்படுகிறது.
ஆனால் சிலருக்கு இந்த யோகம் அமைந்து அந்த யோகப் பலன் உண்டாக வில்லையே என்ற கேள்வி ஏழலாம். 9,10க்கு அதிபதிகள் இணைந்து 6,8 போன்ற இடங்களில் காணப்பட்டால் அந்த யோகத்தின் பலன் உண்டாகாது.
keywords :